கரிகால்
சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த
ஒரு சோழ மன்னன் ஆவான். இவன்
தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்குதிருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன்
பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன்
ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட
ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது,
காஞ்சி முதல் காவிரி வரை
பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது
வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.
சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர்
உண்டு. இவன் அழகான போருக்குரிய
தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன்
என்பதற்குக் கருகிய காலை உடையவன்
என்பது பொருள். இளம் வயதில்
இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக
இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.
ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது,
(எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு
விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை
இழந்து சில ஆண்டுகள் சிறையில்
வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக்
கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள்
உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.
புலிக்குட்டி,
கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம்
பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில்
வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன்
ஆயினான். ஒரு குழியில் யானை
பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை
நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன்
சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு.
இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச்
சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து
சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு
படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான்.
வெண்ணிப்
போர்
இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ
அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும்
இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம்
தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை
அவன் முறியடித்துவிட்டான்.
இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன் பெருஞ்சேரலாதன், தனக்கு
பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி
வடக்கிருந்து உயிர் நீத்தான். இதை
கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.
இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும்
வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல்
போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில்
ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை
இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின்
இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள்
காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.
சொந்த வாழ்க்கை
கரிகாலனின்
சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை.
இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர்
உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண்
ஒருத்தியைக் கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவரது காலத்தின்
நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.
கரிகாற்சோழனின்
மகள் ஆதிமந்தியா. ஆதிமந்தியா செய்யுள்கள் சில பாடியுள்ளார்.
புராணக்
கதைகள்
பழங்காலந்தொட்டே
கரிகாலனைப் பற்றிய பல புராணக்
கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து
வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம்,
கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது.
இப்படையெடுப்பில்,
கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம்,
மகதம், அவந்தி போன்ற சில
நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ
செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினான்
என்பதை ஏழாம், எட்டாம் நூற்றாண்டில்
வாழ்ந்த தெலுங்கு சோ(ட)ழ
மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு
பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.
கல்லணை
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை
வாய்ந்த அணையாகும்.
இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக
அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட
காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது.
அதில் காவிரி ஆறு கிளை
கல்லணையை வந்தடைகிறது.
கல்லணை
காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு,
புது ஆறு, கொள்ளிடம் என
4 ஆக பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது
ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும்
தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது
வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு
இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை
ஆறு ) திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர்
நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.
வரலாறு
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள
அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும்,
தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது.
இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்
திட்டம் என்றும் கூறப்படுகிறது.
மணலில் அடித்தளம் அமைத்து
கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம்
இன்று வரை வியத்தகு சாதனையாகப்
புகழப்படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து
வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும்மட்டுமே சேர்ந்த
ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து
நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.
1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல
இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது
ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட
கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி
பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக்
கண்டு அதைத் தடுக்க காவிரியில்
ஒரு பெரிய அணையைக் கட்ட
முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு
லட்சம் கனநீர் பாயும் காவிரியின்
தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு
வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது
பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர்
அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக
மண்ணுக்குள் சென்றன. அதன் மேல்
வேறொரு பாறையை வைத்து நடுவே
தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும்
களி மண்ணைப் புதிய பாறைகளில்
பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப்
பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்
நல்ல காலமாக மாற்றங்களுக்கு முன்பிருந்த
கல்லணையை 1776-ல் செய்யப்பட்ட ஒரு
பதிவில் இருந்து உய்த்துணர இயலும்.
இப்பதிவு அணைக்கட்டின் விசித்திரமான சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுள்ளது. கல்லணை ஒரு முனையில்
இருந்து மறு முனை வரை
இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன்
காணப்பட்டது. அதன் முகடு மட்டமாக
இல்லாமல் சாய்வாக இருந்தது - கிழக்கு
முனையை விட மேற்கு முனை
அதிக உயரம். அது குறுக்கிலும்
சாய்வாக இருந்தது - சில பகுதிகளில் இது
ஓர் ஒழுங்கான மற்றும் சீரான சாய்வாக
இருந்தது, மற்ற பகுதிகளில் ஒழுங்கற்ற
3 அல்லது 4 படிகள். இறுதியாக, அணை
நெடுகிலும் சுமார் ¾ அங்குல கனத்துக்கு வழுவழுப்பான
சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டிருந்தது. இந்தப்
பூச்சு பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு
முறையாவது மாற்ற வேண்டும். மேலும்,
முன்பக்கம் கரடுமுரடாக சமநிலையற்று இருந்தது. ஆனால் இதுவே மிக
அனுகூலமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில்
இடையறாமல் வண்டல் மண் நீர்மக்குழம்பாகி
அணையின் முன்பக்கச் சுவரை அரிக்காமல் பாதுகாப்பாக
இருந்தது.
கரிகால
சோழன் மணிமண்டபம்
பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான
திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது.
பழைமையான இந்த அணையை கட்டிய
கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில்
இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில்
காவிரி ஆற்றின் இடது கரை
ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால
சோழன் அமர்ந்த நிலையில் சிலை
வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இறப்பு
வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும்
அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை
நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.