உதியன் சேரலாதன்


சங்க காலச் சேர மன்னர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதல் சேர மன்னன், உதியன் சேரலாதன். இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுகிறான். வெளியன் வேண்மான் என்னும் வேளிர் குலத் தலைவன் மகள் நல்லினி இவனுடைய மனைவி ஆவாள். 

இவன் மைந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் இருவரும் ஆவர்.
உதியன் சேரலாதன் ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு ஆகும். ஒன்று தன் நாட்டு எல்லையை விரிவாக்கியது. மற்றொன்று பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்தது ஆகும்.

உதியன் சேரலாதன், தமிழகம் முழுமையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட பேரரசன், இவன் கிழக்கு மேற்கு ஆகிய பெருங்கடல்களை எல்லையாகக் கொண்ட நாட்டை ஆண்டு வந்தான். இம்மன்னனைப் போற்ற வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், “அரசே! கீழ்க்கடலும் நினதே, மேலைக்கடலும் நினதே, ஆதலின் ஞாயிறு தோன்றுவதும் உன் கடலிலேயே, மறைவதும் உன் கடலிலேயே” என்று கூறுகிறார். இதனை,

நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக்குட கடல் குளிக்கும்
(புறநானூறு: 2: 9-10)

என்ற அவருடைய பாடல் அடிகளால் அறியலாம்.
உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியைப் பாராட்டிய புலவர்கள், முரஞ்சியூர் முடிநாகராயரும், மாமூலனாரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும், இளங்கோவடிகளும் ஆவர். 

பாண்டவர் ஐவரும், கௌரவர் நூற்றுவரும் மேற்கொண்ட பாரதப் போரில் அப்போர் முடியும் வரையில் இரு திறப்படையினருக்கும் இவன் பெருஞ்சோறு அளித்தான் என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். இவன் பெருஞ்சோறு அளித்ததை முரஞ்சியூர் முடிநாகராயர்,

அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(புறநானூறு, 2 : 13-16)

என்று கூறுகிறார்.

இக்கருத்துப் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
உதியன் சேரலாதன் தன் எல்லையை விரிவுபடுத்த வேண்டிக் கரிகால் சோழனோடு போரிட்டுத் தோல்வியுற்றான் என்றும், அப்போரில் முதுகில் ஏற்பட்ட புண்ணிற்கு நாணி வடக்குத்திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டான் என்றும் மாமூலனார் அகநானூற்றில் குறிப்பிடுகிறார்.

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள் வடக் கிருந்தென
(அகநானூறு, 55: 10-12)